சிவகாசி
இன்னும் 3 நாட்களில் தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இரண்டாம் அலை பரவலால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனை படுக்கைகள் உள்ளிட்டவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது. தற்போதைய தேவையின் அளவுக்கு உற்பத்தி இல்லாததால் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது.
இது குறித்து சிவகாசியில் நேற்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையை சரி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆலையில் ஏற்பட்ட பழுது காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த 3 நாட்களில் அந்தப் பழுது சரி செய்யப்பட்டவுடன் நமக்கு ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்குத் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் நெதர்லாந்து நாட்டில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜனை கொண்டு வர தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளார்.
தவிர மேலும் 30 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நமக்கு வர உள்ளது. அதற்காக காலி சிலிண்டர்களை அனுப்பி வைத்து அதில் ஆக்சிஜன் நிரப்பிக்கொண்டு வந்து தேவைப்படுபவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜனை சேமித்து வைக்க சீனாவிலிருந்து 12 கன்டெய்னர்கள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உடனடியாக ஆக்சிஜன் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக சிலிண்டர்களை கொண்டு செல்ல இந்திய விமானப்படை விமானங்களை பயன்படுத்த உள்ளோம்.
இன்னும் 3 நாட்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுகள் முழுமையாகச் சீராகும். அதே வேளையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியும் தொடங்கிவிடும். ஏற்கனவே கடந்த காலங்களில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு தற்போது செயல்படாமல் உள்ள தொழிற்சாலைகளை கண்டறிந்து, அங்கு உரிய ஆய்வு நடத்தி ஆக்சிஜன் தயாரிக்க வாய்ப்பு இருந்தால் அங்கேயும் பணி தொடங்கப்படும். அதன்படி திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.