“உலகில் மனிதன் தன்னை மிகப்பெரிய உயிரினம் என்றும், தான் மட்டுமே இங்கு வாழ்வதற்கு தகுதியானவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறான், இந்த எண்ணத்தை போக்கவே கொரோனா வைரஸ் உருவாகி இருக்கிறது. பல உரு மாறி மனிதனை ஓட ஓட விரட்டுகிறது” என்று உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் த்ரிவேந்தர் சிங் ராவத் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வை சேர்ந்த த்ரிவேந்தர் சிங் ராவத் இதுபோன்று பேசுவது இது முதல் முறையல்ல என்பதும் இது அவரின் மரபணுவில் ஊறிப்போன ஒன்று என்பதும் அனைவரும் அறிந்ததே.
இருந்தபோதும், நாள் தோறும் நாடுமுழுக்க 4000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் காரணமாக உயிரிழந்து வரும் வேளையில், அந்த வைரசுக்கு பாலூற்றி பல்கி பெருக வேண்டும் என்ற கருத்தில் “கொரோனா வைரசும் உலகில் மற்ற உயிரினங்களை போல ஒன்று, இங்கு உயிர்வாழ அதற்கும் உரிமை உண்டு” என்று அவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராவத் இவ்வாறு பேசியிருப்பது உத்தரகாண்ட மாநிலத்திற்க்கே அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அம்மாநில காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மருத்துவர் அஜய் கண்ணா, “மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்று பேசுவது இறந்தவர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது, ஒரு முன்னாள் முதல்வர் இப்படி பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்டார்.
“மக்கள் வைரஸால் மடிவதை விட, மக்களை பற்றி கவலை படாத இதுபோன்ற தலைவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் தான் அதிகம் மடிகின்றனர், இவர்களை தேர்ந்தெடுத்ததற்காக அதை அனுபவிக்க வேண்டியுள்ளது” என்று அம்மாநில மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.