சேலம் இரும்பாலை மற்றும் ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடன் சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
500 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சிறப்பு சிகிச்சை மைய்ய பணிகளை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா பரவல் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆக்சிஜன் படுக்கை வசதியின் தேவை கருதி சேலம் இரும்பாலை, ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
இந்த 500 படுக்கைகளுக்கான ஆக்சிஜன் சேலம் இருபாலையில் இரும்பு உற்பத்திக்காக தயார் செய்யப்படும் ஆக்சிஜன் மூலம் பெறப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிகிச்சை மையத்திற்கு தேவையான மின்சாரம், குடிநீர், கழிப்பறை, சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.