துரா

டிவிட்டரில் பிரதமர் மோடியால் பின்பற்றப்பட்ட ஆர் எஸ் எஸ் தொண்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்காததால் உயிர் இழந்துள்ளார்.

ஆர் எஸ் எஸ் இயக்க தொண்டரான அமித் ஜெய்ஸ்வால் ஜெயின் என்பவர் உபி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  இவருக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் பற்று உண்டு.   இவர் சமூக வலைத் தளங்களில் மிகவும் தீவிர பாஜக ஆதரவாளராக இருந்து வந்தார். டிவிட்டரில் இவரைப் பிரதமர் மோடி பின்பற்றி வந்தார்.   அமித் தனது மொபைல் டிஸ்பிளேவாக மோடியின் படத்தை வைத்திருந்தார்.

சுமார் 42 வயதாகும் அமித் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.  இதையொட்டி அவர் மருத்துவமனையில் சேர்க்க அழைத்து செல்லப்பட்டார்.  அங்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.  அதன் பிறகு அவர்களே முயன்று மதுரா நகரில் உள்ள நியதி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவருக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்டதால் மோடியின் ‘பக்தர்’எனக் கருதப்படும் அமித் தின் சகோதரி டிவிட்டரில் பதிவிட்டார்.

அதைக் கண்டு மோடி உதவுவார் என அவர் எதிர்பார்த்தார்.   ஆனால் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.   அதன் பிறகு 9 நாட்கள் சென்ற பிறகு ஏப்ரல் 29 ஆம் தேதி அதிகாலை அமித் மருந்து கிடைக்காமல் மரணமடைந்தார்.  அமித் தனது  காரில் மோடியின் மிகப் பெரிய  போஸ்டரை வைத்திருந்தார்.   ஆத்திரமடைந்த அமித் சகோதரி அதை அன்றே கிழித்து எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.