சென்னை
ஊரடங்கு நேரத்தில் மாவட்ட நீதிமன்ற ஊழியர்களுக்கு வாகன வசதி செய்து தர நீதிபதிகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரண்டாம் அலை கொரோனவால் நாடு முழுவதும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த நாடெங்கும் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நாளை அதாவது மே மாதம் 10 ஆம் தேதி முதல் மே மாதம் 24 வரையிலான 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகிறது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தன்பால் அனைத்து முதன்மை மாவட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில்
“அரசு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு அடைப்பை அமலாக்க உள்ளது. இந்த முழு அடைப்பில் இருந்து நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே நான் அனைத்து முதன்மை மாவட்ட நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு நீதிமன்ற ஊழியர்களுக்கு வந்து போகத் தேவையான போக்குவரத்து வசதிகளைச் செய்து தரக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதற்காக ஊழியர்களை ஏற்றி வரும் இடங்களைக் கண்டறிந்து அறிவித்து ஊரடங்கு நேரத்தில் தமிழக மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட உதவ வேண்டும்”
என உத்தரவிடப்பட்டுள்ளது.
Corona, Lock down, TN, court staff, Transport, Judges, High court,