கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியபோதே, இந்தியாவில் ஓடிடி நிறுவனங்கள் பிரபலமாகத் தொடங்கிவிட்டன. தற்போது கொரோனா 2-வது அலையின் தீவிரத்தை முன்வைத்துப் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது ‘நமீதா தியேட்டர்ஸ்’ என்ற பெயரில் புதிதாக ஓடிடி தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய ஓடிடி தளம் குறித்து நடிகை நமீதா :
“திரை உலக நண்பர்களும் மக்களும் கடந்த வருடங்களில் எனக்கு மிகுந்த பிரபலத்தையும் பெரும் அன்பையும் அளித்து வந்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அதைத் திருப்பி அளிக்க நினைத்தேன். பலவிதமான ஐடியாக்களை நினைத்து வந்தபோதுதான் ரவி வர்மாவைச் சந்தித்தேன்.
திரைப்படத் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்பு முடித்து, பலவித கார்ப்பரேட் வணிகங்களைச் செய்து வந்துள்ளார். அவர்தான் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகும் கதைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு ஓடிடி தளத்தை ஆரம்பிக்கும் ஐடியாவைத் தந்தார். புதிதாக திரைத்துறைக்கு வரும் இளம் திறமைகளுக்குத் தேவையான உதவியை அளிக்கும் எண்ணம் எப்போதுமே என்னிடம் இருந்து வந்தது.
புதிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இது ஒரு நல் வாய்ப்பாக அமையும். மேலும், சிறு படத் தயாரிப்பாளர்களும் இத்தளம் மூலம் தங்கள் திரைப்படங்களைத் திரையிடலாம். நாங்கள் இத்தளத்தைத் தொடங்கிய கணமே, நாங்கள் நினைத்தே பார்த்திராத அளவு, இத்தளத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
முதல் பகுதிக் கதைகள், திரைப்படங்களை நமீதா தியேட்டர்ஸ் தளத்தில் வெளியிட அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாளை எதிர்பார்த்துள்ளோம். இந்த இனிய பயணத்தில் என்னையும் பங்கேற்க வைத்ததற்கு இந்நேரத்தில் ரவிவர்மாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.