மதுரை: தமிழகத்தில் எவ்வளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளது? செங்கல்பட்டு பயோடெக் நிறுவனத்தில் வசதிகள் இருந்தும் தடுப்பூசி தயாரிப்புக்கு மத்திய அரசு பயன்படுத்தாதது ஏன் எனவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
மதுரையை சேர்ந்த விரோனிகா மேரி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், “திருச்சியில் 1963ஆம் ஆண்டு பெல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இங்கு 50,000 பேர் வேலை செய்து வருகின்றனர். பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக் கூடிய 3 பிளான்ட்டும், ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய திறன் கொண்டது. ஆனால், இங்கு 2003 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று, செங்கல்பட்டு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான HLL பயோடெக் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு பல வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது அதுவும் பயன்படுத்தவில்லை.
கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிற நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடும், தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அதனால், திருச்சியில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் பணியை மேற்கொள்ள போதுமான கட்டமைப்பு வசதிகளை செய்து ஆக்சிஜன் தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்று செங்கல்பட்டில் இயங்கிவரும் HLL பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்” என கூறியிருந்தார்.
இந்த மனுமீது நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அப்போது, செங்கல்பட்டு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தை பார்க்கும் போது தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தேவை எந்த அளவு பற்றாக்குறை உள்ளது என்பது தெரியவருவதாகவும்,
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது? எவ்வளவு இருப்பு உள்ளது? தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்கள் எத்தனை செயல்படாமல் உள்ளன? செயல்படாமல் இருக்கும் ஆக்சிஜன் தயாரிக்கும் மையங்களில் எத்தனை மையங்களை உடனடியாக செயல்படுத்த முடியும்? என சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், செங்கல்பட்டில் உள்ள HLL பயோடெக் நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை மே 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.