கொழும்பு: இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளதால், இந்திய விமானங்கள் இலங்கை வர தடை போட்டுள்ளது. இந்தியர்கள் இலங்கை வரவும் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா நிலைமை தொடர்பாக சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்ட அறிவறுத்தலுக்கு ஏற்ப, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள், இந்த நடவடிக்கை உடனடியாக அமல்படுத்தப்படும். உள்ளூர் சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தலின் படி இந்த கட்டுப்பாடு முடிந்த வரை விரைவாக மதிப்பாய்வு செய்யப்படும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. மேலும், இந்திய விமானங்களும் இலங்கை வர தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் மே 14ம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆஸ்திரேலியா வந்தவர்கள், 14 நாட்கள் கட்டாயமாக தனிமை மையங்களில் இருக்க வேண்டும். அடுத்த 14 நாட்களுக்கு, இந்தியாவில் இருந்த ஆஸ்திரேலியர் உள்ளிட்டோர், ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும் எனவும் அந்நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவிருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகள் வர தடை விதித்த நிலையில், இலங்கையும் தடை விதித்துள்ளது.