சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முதல் புதிய கொரோனா கட்டப்பாடுகள் அமல்படுத்துவதால், மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் செல்ல அனுமதி, பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் இந்த கட்டுப்பாடுகள் வரும் 20ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும்  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. அதன்படி பெரிய வணிக நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சாதாரண காய்கறி, மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியானது.

அதன்படி, ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும். இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லை. மளிகை, காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை.

நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்.

ஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதி.

உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அத்துடன் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் 50 சதவிதம் பணியாளர்களுடன் மட்டும் இயங்க வேண்டும் ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளை முதல் புறநகர் ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் மட்டுமே ரயிலில் செல்லலாம்.  மேலும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை, தூய்மை பணியாளர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுமதி ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 20ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு மின்சார ரயில்களில் அனுமதி இல்லை