வாரணாசி
மோடியின் தொகுதியான வாரணாசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கொரோனா மிகவும் அதிகரித்து வருவதால் மக்கள் அவர் மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் இந்துக்களின் புனித நகரமான வாரணாசி நகர் உத்தரப்பிரதேச மாநில வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. வாரணாசிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுவது மற்றும் நீத்தோர் கடன்களைக் கழிப்பது ஆகியவற்றை நடத்துகின்றனர். தற்போது இரண்டாம் அலை கொரோனா பரவலில் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளில் வாரணாசியும் ஒன்றாகும்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது. இதில் வாரணாசி மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கு கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மருத்துவ வசதிகள் அதிகரிக்கவில்லை என்பதே உண்மையாகும். கொரோனா நோயாளிகளில் பலருக்கு மருத்துவமனையில் போதுமான படுக்கைகள் இல்லை. அனுமதிக்கப்பட்டோருக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.
பல இடங்களில் மருந்துகள் இல்லாததால் காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒன்றும் மருந்து இல்லாத நிலையில் இந்த மருந்துக்கு ஓரளவு திறன் இருப்பதால் அளிக்கப்படுவதாக மருத்துவமனையில் சொல்லப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இரண்டாம் அலை பரவல் மும்பை மற்றும் டில்லி நகரங்களில் தீவிரம் அடைந்த போதே வாரணாசிக்குப் பலரும் வந்து போனதால் தொற்று அதிகரித்துள்ளது/
அதன் பிறகு மார்ச் 29 அன்று நடந்த ஹோகி பண்டிகை மற்றும் ஏப்ரல் 18 அன்று நடந்த கிராம குழு தேர்தல் ஆகியவையும் பரவலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நாளுக்கு நாள் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவமனையில் இடமின்மை போன்றவை மக்களுக்கு மேலும் கோபத்தைத் தூண்டி உள்ளது.
மேலும் தனது சொந்த தொகுதி மக்கள் கொரோனாவால் அவதிப்படுகையில் அதைக் காணப் பிரதமர் மோடி வராதது கோபத்தை அதிகரித்துள்ளது. உத்தரப்பிரதேச முதல்வரும் வாரணாசி கொரோனா குறித்து கண்டுகொள்ளவில்லை.
எனவே உள்ளூர் மக்கள், “பிரதமரும் முதல்வரும் எங்கோ ஒளிந்துக் கொண்டுள்ளனர். அதைப் போல் உள்ளூர் பாஜக தலைவர்களும் காணவில்லை. அவர்களுடைய மொபைல் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இவர்களுடைய உதவி தேவைப்படும் நேரம் இது. ஆனால் இங்கு அவர்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை. நாங்கள் அவர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளோம்” என தெரிவித்துள்ளனர்.