டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த 3 மாதம் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தீவிரமடைந்து வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதுவரை 15,89,32,921 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்திய தடுப்பூசிகள் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசியின் விலை உயர்வு காரணமாக, சீரம் நிறுவனத்துக்கு கடும் மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடத்து, அதார் பூனவல்ல தனி விமானம் மூலம் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தும் விதமாக சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி டோஸ் மருந்துகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் மருந்துகளையும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது.
ஆனால், தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னும் 3 மாதங்கள் நீடிக்கும் என சீரம் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில், மாதம் ஒன்றுக்கு 7 கோடி டோஸ் வரை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதை 10 கோடி அளவில் தயாரிக்க திட்டடு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுத்துள்ளதால், உற்பத்தியை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது என்றும், , 3 மாதங்களில் தட்டுப்பாடு சரியாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.