நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சரிவு, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலா 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள், தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. குறைந்தபட்சம் தலா 4 முதல் 5 தொகுதிகளில் அக்கட்சிகள் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளன அக்கட்சிகள்.

இத்தேர்தலில், சிபிஐ தான் போட்டியிட்ட தளி, பவானிசாகர், திருப்பூர் (வடக்கு), வால்பாறை, திருத்துறைப்பூண்டி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில், தளி மற்றும் திருத்துறைப்பூண்டியில் மட்டுமே வென்றுள்ளது.

இத்தேர்தலில் சிபிஎம் தான் போட்டியிட்ட அரூர், திண்டுக்கல், கீழ்வேளூர், கந்தர்வக்கோட்டை, திருப்பரங்குன்றம் மற்றும் கோவில்பட்டி ஆகியவற்றில், கீழ்வேளூர் மற்றும் கந்தர்வக்கோட்டையில் மட்டும் வென்றுள்ளது.

அதிலும் அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசனிடம் தோற்றது பலராலும் அதிர்ச்சியுடன் பார்க்கப்படுகிறது. மேலும், அக்கட்சி திருப்பரங்குன்றத்தில் தோற்றதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில், சட்டமன்றத்தில் இடம்பெறாத கம்யூனிஸ்டுகள், இத்தேர்தலில் நுழைகிறார்கள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் சந்தித்த சரிவு என்பது முற்றிலும் எதிர்பாராத ஒன்றுதான்.