ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஸ்டார் வேட்பாளர்களுள் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜகவின் முகம் தெரியாத ஒருவரால், மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
இத்தேர்தலில் வென்றால், தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகராக பதவியேற்பார் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
தமிழ் ஈழப் போராட்டத்திற்கு பெரியளவில் உதவிகளை செய்தவர். போரில் காயம்பட்ட போராளிகளுக்கு, தன் பொறுப்பில் தங்கவைத்து மருத்துவம் பார்த்தது, அவற்றுள் மிக முக்கியமானது.
ஈழப் போராட்ட ஆதரவிற்காக, ஜெயலலிதா அரசால் கைதுசெய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். இயற்கை விஞ்ஞானி என்று புகழப்பட்ட நம்மாழ்வாரின் ‘வானகம்’ பண்ணை(கரூர்) அமைவதற்கு பேருதவி புரிந்தவர்.
மறைந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான ‘டெசோ’ அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்.
இத்தகு பல்வேறு சிறப்புகள் மற்றும் பாரம்பரியம் வாய்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், பாஜக வேட்பாளரிடம் தோற்றிருப்பது, ஒரு அரசியல் அவலம் என்றே கூறுகிறார்கள் சில விமர்சகர்கள்.