பேரணி நடத்திய அரசியல் கட்சிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்தை குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் துவிவேதி கூறினார்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நேரத்தில் தேர்தலை நடத்துவது ஏற்புடையதல்ல, கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் காரணம், அதற்காக தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் கூட சுமத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடந்த வாரம் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

சென்னை உயர்நீதி மன்ற கருத்தின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் ஒரு தன்னிச்சையான அமைப்பு, அதற்கும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சென்னை உயர்நீதி மன்றத்தின் இந்த கருத்து ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் மீது களங்கம் ஏற்பட்டுள்ளது என்று துவிவேதி வாதாடினார்.

“இது போன்ற வார்த்தைகளுக்கு பதில் வேறு ஏதாவது வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம், அந்த நேரத்தில் நீதிபதியின் மனதில் என்ன தோன்றியது என்று தெரியவில்லை, மேலும் நீதிபதிகள் கருத்து தெரிவிப்பது குறித்து நீதிமன்ற மாண்பு கருதி தலையிட முடியாது” என்று நீதிபதி ஷா கூறினார்

“நீதிமன்றத்தில் நடக்கும் விவரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று தெரிவிக்க இயலாது, ஆனால் அதில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டியது ஊடகங்களின் கடமை” என்று தெரிவித்த நீதிபதி சந்திரசூட்

“நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டும் ஏற்றுக்கொள்ளும் படியான முறையான அணுகுமுறையை பற்றி விவாதிப்போம்” என்று மேலும் கூறினார்.

இதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்