பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 24 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புக்குள்ள மாநிலங்களில் கர்நாடக மாநிலமும் ஒன்று. ஆனால், பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மருந்துவ வசதிகளில் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சாமராஜநகர் மருத்துவமனை ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், 12 பேர் கொரோனாவாலும், 12 பேர் கடுமையான வியாதிகளால் உயிர் இழந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் பிற காரணங்களால் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் மருத்துவ ஆய்வு அறிக்கைக்காக காத்திருப்பதாக மாவட்ட பொறுப்பாளர் அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, உ.பி. போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில், தற்போது கர்நாடகாவிலும் பலர் உயிரிழந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.