புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள  நிலையில், மாநிலத்தின் முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி பதவி ஏற்க உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 9, அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன.

இதேபோல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ்-14, திமுக-13, இந்திய கம்யூனிஸ்ட்-1, விசிக-1 ஆகிய கட்சிகள் போட்டி யிட்டன. இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. சுயேச்சைகளையும் சேர்த்து 324 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கிறது. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி  9 இடங்களிலும் மற்றவை 5 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் என்.ஆர்.ரங்கசாமி மாநிலத்தின் புதிய முதல்வராக வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு  பாஜக குடைச்சல் கொடுத்தால், பாஜகவை கழற்றிவிட்டு விட்டு, அங்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி தொடரவும் வாய்ப்பு உள்ளது.  ஏனென்றால், கூட்டணியின்போதே,  என்.ஆர்.காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் சலசலப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.