சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது.  10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை திமுக கைப்பற்றி இருப்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று (மே 2ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  இதில்,   திமுக கூட்டணி 159 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. இதில் திமுக நேரடியாக 125 இடங்கள் முன்னிலையில் உள்ள நிலையில், தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதனால், திமுக தனித்தே ஆட்சி அமைக்க உள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கப்போகிறார் .

திமுக கூட்டணி பெற்றுள்ள மொத்த  159 இடங்களில், திமுக 125 இங்களிலும், காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், விசிக 4  இடங்களிலும், சிபிஐ 2, சிபிஎம் 2, மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் திமுக சுனாமி அலையாக பெருவெற்றியை பெற்றுள்ளது. இந்த சுனாமியில் சிக்கி 11 அதிமுக அமைச்சர்கள் காணாமல் (தோல்வி)  போயுள்ளனர்.

அதிமுக கூட்டணி 75  இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றி மாநில எதிர்க்கட்சி அந்தஸ்தை  பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான பாமக 5 இடங்களையும், பாஜக 4 இடங்களையும், மற்றவை 1 இடத்தையும் கைப்பற்றி உள்ளன.

234 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அனைத்திலும் தொல்வி அடைந்தாலும், பெரும்பாலான தொகுதிகளில் 3வது இடத்தில் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக கூட்டணிகள் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.