தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைவதிலும், அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியமைவதிலும் ஒரு ‘காலப்பொருத்தம்’ இதுவரை இருந்து வருகிறது. இந்த 2021 தேர்தலிலும் அந்த ‘காலப்பொருத்தம்’ வேலை செய்துள்ளது.

கடந்த 1967ம் ஆண்டு, தமிழ்நாட்டில் திமுக முதன்முதலாக அரியணை ஏறும்போது, கேரளாவில் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 1969ம் ஆண்டில், கலைஞர் கருணாநிதி முதல்வராக பதவியேற்றபோதும், கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியே இருந்தது.

ஆனால், 1971ம் ஆண்டில், திமுக வென்றபோது மட்டும் அந்த நிலை மாறிவிட்டது. அப்போது கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்தது.

பின்னர், நீண்டகாலம் கழித்து, 1989ம் ஆண்டு தமிழ்நாட்டில், கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தபோது, கேரளத்தில் ஈ.கே.நாயனார் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. பின்னர், 1996ம் ஆண்டு திமுக மீண்டும் அரியணை ஏறியபோது, கேரளத்தில், ஈ.கே.நாயனார் தலைமையில் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது.

கடந்த 2006ம் ஆண்டு, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஏற்பட்டது. அப்போது, கேரளத்தில் அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி ஏற்பட்டது. அந்த வரிசைப்படி, 2016ம் ஆண்டு கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டபோது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், கெடுவாய்ப்பாக அதிமுக ஆட்சியே மீண்டும் அமைந்துவிட்டது.

ஆனாலும், இப்போது நீண்டகாலம் கழித்து, கேரளத்தில், ஒரே கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டு, திமுக  & கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சிகள் என்ற ‘காலப்பொருத்தம்’ மீண்டும் நிகழ்ந்துள்ளது.