சென்னை

நாளை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகள் தொடங்க வாய்ப்பில்லை எனச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார்.

நாடெங்கும் கொரோனா நோயாளிகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றனர்.  இதையொட்டி பல இடங்களில் கொரோனா சிகிச்சை மயங்கள் தொடங்கப்பட்டுள்ளன.  சென்னை நகரில் நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையம் உள்ளிட்ட பல இடங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவுதலைத் தடுக்க ஏற்கனவே முதல் கட்டமாக முன் களப் பணியாளர்கள், சுகாதார மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்பட்டது.   மார்ச் 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோய் உள்ளோருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.  ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

மூன்றாம் கட்டமாக 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அரசு அறிவித்தது.  அதையொட்டி கோடிக்கணக்கானோர் தடுப்பூசி  போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.   இதுவரை கொரோனா தடுப்பூசி மையங்கள் எங்கெங்கு அமைக்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள சிகிச்சை மையத்தைச் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வை இட்டார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் நாளை கொரோனா தடுப்பூசி திட்டம் நாளை தொடங்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.  தற்போது போதிய அளவு தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் தாம் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.