சென்னை: நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் (நாளை) கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை தடுப்பூசி திட்டம் தொடங்குவது சந்தேகமே என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு போடும் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு இன்னும் வரவில்லை. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து எப்போது வரும் என்று தெரியவில்லை. தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
அதேவேளையில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பில் உள்ளது. அவை தொடர்ந்து செலுத்தப்படும் என்றவர், தமிழகஅரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்துக்காக, 1.5 கோடி தடுப்பூசி வாங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா குறித்து , சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றவர், கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில்தான் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.