சென்னை: கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கை வசதிகளை பெற, தமிழக சுகாதாரத்துறை டிவிட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்மூலம் படுக்கைகளை பெற முடியும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகபட்ச பாதிப்புக்கு தலைநகர் சென்னை உள்ளாகி வருகிறது. மக்களின் மெத்தனப் போக்கு, மக்கள் நெருக்கம் காரணமாக தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகளுக்கு மருத்துவனைகளில் படுக்கை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதையடுத்து, , தமிழக சுகாதாரத்துறை சார்பில், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், படுக்கை வசதி பெற டிவிட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. @104_GoTN என்ற டிவிட்டர் கணக்கு மூலம் படுக்கை வசதியை கோரலாம். கொரோனா நோயாளிகளின் கோரிக்கை கையாள ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையம் வழியாக கட்டளை மையம் கண்காணித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கட்டளை மையம் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி செய்திகளைப் பகிர்வதையும், தேவைப்படாதவர்களுக்கு படுக்கைகள் கேட்பதையும் தவிர்க்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் என்றும், டிவிட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.