தூத்துக்குடி: மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் கருத்துக்கு எதிராக, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் , உச்சநீதிமன்றமும் ஆலையை திறக்க அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாத்தில் காவல்துறைக்கு எதிராகவும், தூத்துக்குடியில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் வாட்ஸ் அப்பில் அவதூறு தகவல்களை பரப்பியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் என்பவர் மீது வடபாகம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் அளித்த புகாரின் பேரில், 504, 505, 505/1 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஆலையை சுற்றியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட பல இடங்களில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். 4 மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசின் அடக்குமுறையை மீறி தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. நேற்று போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 37பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது 143, 269, 270, மற்றும் கோவிட் 19 தொற்று நோயை பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுபோல, பண்டாரம்பட்டி கிராமத்தில் போராட்டம் நடத்தியதாக வசந்தி, ஓட்டப்பிடாரம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் அருணாதேவி, சந்தோஷ்ராஜ் உள்ளிட்ட 40 பேர் மீது சிப்காட் போலீஸ் நிலையத்திலும், புதுத்தெருவை சேர்ந்த மரிய ஹன்ஸ் (41) உள்ளிட்ட 21 பேர் மீது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி மட்டக்கடை புதுத் தெருவில் போராட்டம் நடத்திய 20 பேர் மீது வடபாகம் சப் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் ராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருப்பு கொடி கட்டியும், வீட்டின் வாசல்களில் “BAN ஸ்டெர்லைட்” என்று கோலமிட்டும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியில் மக்கள் இன்று கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். இதையொட்டி ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் கருப்புக்கொடி கட்டியிருக்கின்றனர். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் BAN ஸ்டெர்லைட் என்று கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, நாளை (30ந்தேதி) ஆலைக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த எதிர்ப்பு மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். இதையடுத்து அமைப்பின் நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு அளித்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையானது மீண்டும் காப்பர் தொழிற்சாலையை திறப்பதற்காகவே உச்சநீதிமன்றத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து தருவதாக மனு தாக்கல் செய்து உத்தரவு பெற்றுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பயன்படுத்தி வேதாந்தா நிறுவனம் காப்பர் தொழிற்சாலையை திறக்க முயற்சிக்கும். இதனால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையின் நயவஞ்சக போக்கை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உற்பத்தி தொடங்கும் முன் தமிழக அரசு குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரியும் வருகிற 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வி.வி.டி. சிக்னல் அருகே சிதம்பர நகரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், உண்ணாவிரத போராட்டதிற்கு அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது பேசிய ஆட்சியர், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுகிறது. காப்பர் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தினரின் முற்றுகையால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலையை திறக்க உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.