சென்னை

கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்றுடன் மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் நிறுத்தப்பட்டுள்ளது.

நாடெங்கும் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 60 வயதைக் கடந்தோருக்கும் 45 வயது முடிந்து இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.   இதில் அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார மையங்கள் ஆகியவற்றுடன் பல தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது.    இதையொட்டி பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவ தொடங்கியது.  தமிழகத்தின் பல பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அவ்வகையில் சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் இன்றுடன் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   தடுப்பூசி மருந்து தட்டுப்பாட்டால் மேலும் பல தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.