டில்லி
நேற்று ஒரே நாளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.33 கோடி பேர் கொரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளனர்.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல் கட்டமாக ஜனவரி 16 முதல் கொரோனா முன்களப் பணியாளர்கள், மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்டமாக மார்ச் 1 முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கும் 45 வயதைக் கடந்து இணைநோய் உள்ளோருக்கும் போடப்பட்டது.
ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அது விரிவு படுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக நேற்று மாலை 4 மணியில் இருந்து கோவின், ஆரோக்கிய சேது, மற்றும் உமாங் ஆகிய செயலிகளில் முன்பதிவு தொடங்கியது.
ஒரே நேரத்தில் எக்கச்சக்கமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால் அனைத்து தளங்களும் முடங்கின. அதன் பிறகு அது சரி செய்யப்பட்டு மீண்டும் முன்பதிவு தொடங்கியது. நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சுமார் 1.33 கோடி பேர் முன்பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது மாநில அரசுகளும் தனியார் மருத்துவமனைகளும் மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்யலாம் என அரசு உத்தரவிட்டுள்ளதால் இது வரை தடுப்பூசி மையங்கள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் உள்ளது மேலும் தற்போது 6 மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால் மருந்துகள் மே 15க்கு பிறகே கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.