அலகாபாத்: உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிராமப்புறங்களில், கொரோனா பாதிப்பால், மக்கள் அதிகளவில் மரணமடையும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில், கொரோனாவின் இரண்டாவது அலையில், அதிகம் பாதித்த மாநிங்களில் உத்திரப்பிரதேசமும் ஒன்று. இந்தியாவிலேயே, மிக மோசமான மருத்துவக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் இது முக்கியமானது.
தற்போது, பாஜகவின் யோகி முதல்வராக இருக்கும் நிலையில், நிலைமை மிக மிக மோசமாக உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து யாரும் கேள்வியெழுப்பக் கூடாது என்ற உத்தரவு வேறு அங்குள்ளது.
இந்நிலையில், அங்குள்ள முக்கியமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிலவற்றில், கொரோனா பரிசோதனையே மேற்கொள்ளப்படுவதில்லை என்ற புகாரும் உள்ளது. அது நிர்வாக உத்தரவு என்றும் சொல்லப்படுகிறது.
அங்குள்ள மருத்துவர்களும் கையறு நிலையில் உள்ளனர் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 200 கிராமங்களின் நம்பிக்கையாக விளங்கும் ஒரு முக்கியமான ஆரம்ப சுகாதார மையத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உத்திரப் பிரதேசத்தின் நகர்ப்புற பகுதிகளைப் போன்று, கிராமப்புற பகுதிகளும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன என்றே தகவல்கள் கூறுகின்றன.