புதுடெல்லி: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து தொடர்பாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகள் தொடர்பாக, தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் முக்கிய மருந்தான ரெம்டெசிவிர், ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெறுபவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட வேண்டுமென்ற புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்தது. அந்தக் குறிப்பிட்ட மருந்தின் தட்டுப்பாட்டை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இப்படியானதொரு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கருத்து தெரிவித்த நீதிமன்றம், “இந்த அரசு மக்கள் சாக வேண்டுமென்று விரும்புவதாய் தெரிகிறது. இது முற்றிலும் தவறான ஒரு நடவடிக்கை. இது ஒரு யோசனையற்ற நடவடிக்கையாக இருக்கிறது.

தற்போது, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவதிப்படும் மக்கள், ரெம்டெசிவிர் மருந்தின்றியும் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மோசமான ஒரு நிர்வாக குளறுபடியாகும்” என்றுள்ளது நீதிமன்றம்.

கொரோனா சிகிச்சையில் இருந்துவரும் ஒரு வழக்கறிஞர், தனக்கு 6 டோஸ்கள் வழங்கப்பட வேண்டிய மருந்து, 3 டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டதையடுத்து, தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு சாடியது. அந்த வழக்கறிஞர், இறுதியாக, தனது பங்கான 6 டோஸ்களை, முழுமையாக பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.