சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 22ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். கொரோனா சிகிச்சையைக் கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி இணை கமிஷனர் (சுகாதாரம்) அல்பிஜான் வர்கீஸ் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா சிகிச்சையைக் கண்காணிக்க தரேஸ் அகமது ஐஏஎஸ் என்பவர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகளையும் கண்காணிப்பார். சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 150 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமாகி உள்ளதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. 5 மண்டலங்களில் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தற்போது 897 தெருக்கள் 6 பேருக்கும் மேல் தொற்று பாதித்ததாக கண்டறியப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ ஆலோசனை மூலம் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் குழுக்கள் மூலம் போன் வழியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. தினமும் 2 ஆயிரம் பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் கொரோனா பாதித்த 22 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்ட அவசர தேவைகள் தன்னார்வலர்கள் மூலம் செய்து கொடுக்கப்படுகிறது.இவர்கள் பாதிக்கப்பட்ட நோயாளிகளை போன் வாயிலாக தொடர்பு கொண்டு அந்த நேரத்துக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மேலும் 100 தன்னார்வலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். அவர்கள் போன் வழியாக பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு உதவி செய்வதோடு அவர்களை தினமும் கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.