உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது தம்பதியினர் 850 கி.மீ. தூரம் கடந்து சென்று வங்காளத்திள் உள்ள சின்சுராவில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், தங்கள் சொந்த மாநிலத்தில் உள்ள ஆறு மருத்துவமனைகள் ஆக்சிஜன் பாற்றாக்குறையை காரணமாக கூறி இவர்களுக்கு மருத்துவமனையில் இடமில்லை என்று திருப்பி அனுப்பியதால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமருக்கு கோயில் கட்டுவதே நோக்கம் என்று பா.ஜ.க. ஆட்சி நடக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரை சேர்ந்த தம்பதிகளுக்கு தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

அயோத்யாவை சேர்ந்த ரேகா (48) லால்ஜி யாதவ் (50) இருவருக்கும் கடந்த 10 நாட்களாக காய்ச்சல், சளி, இருமல் இருந்துவந்த நிலையில், இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது.

ரேகா

இதனை அடுத்து வீட்டிலேயே இருந்த இருவரும், நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாவதை உணர்ந்து அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளை நாடியுள்ளனர், எந்த ஒரு மருத்துவமனையிலும் படுக்கையும், ஆக்சிஜனும் இல்லை என்று கூறி அவர்களை வீட்டிற்கே திருப்பி அனுப்பினர்.

இந்த தகவலை அறிந்து மேற்கு வங்க மாநிலம் மோக்ராவில் வசிக்கும் ரேகாவின் சகோதரர் ரவி சங்கர் யாதவ், மோக்ரா அருகில் உள்ள சினசுராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்திருப்பதாகவும், ஆம்புலன்ஸ் வைத்துக்கொண்டு இங்கு வந்துவிடும்படி அறிவுறுத்தினார்.

தங்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சகோதரரின் வார்த்தையை ஏற்று ஆம்புலன்ஸ் வாடகையாக 60,000 ரூபாய் செலவழித்து 850 கி.மீ. தொலைவில் உள்ள சின்சுரா சென்றடைந்தார். நெடுந்தூரம் பயணிக்க வேண்டி இருந்ததால், ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜனை அதற்கேற்றாற் போல் சிக்கனமாக பயன்படுத்தினர்.

அங்குள்ள அஜந்தா சேவா சதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் சிகிச்சையளிக்கப்படும் நிலையில், கணவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த பெண்மணியின் உடல்நிலை தெரிவருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

“இவர்கள் இங்கு அனுமதிக்கப்படும் வரை நோயாளிகள் இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு தெரியாது” என்று கூறும் அந்த மருத்துவமனையின் முதலாளி சஞ்சோய் சின்ஹா “இவர்கள் மூச்சு விட கூட சிரமப்பட்ட நிலையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து உத்தர பிரதேசத்தில் இருந்து இங்கு வந்து சேர்ந்திருப்பது வியப்பாக உள்ளது, அதே வேளையில் மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவ வசதி குறித்து பெருமையாகவும் உள்ளது” என்றும் தெரிவித்தார்.

“லால்ஜி யாதவுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நிலையில், அந்த மருந்து நாடு முழுவதும் தட்டுப்பாடாக உள்ளது, இருந்தபோதும் அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம், அது கிடைத்தவுடன் அவர் உடல் நிலை தேறிவிடுவார்” என்று சஞ்சோய் சின்ஹா கூறினார்.

“தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகியோர் முறையான மருத்துவ வசதி கிடைக்காமல் உத்தர பிரதச மாநிலத்தில் அல்லாடியதாகவும், அங்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறிய நிலையில் இங்கு பரிசோதித்து பார்த்ததில் அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி இருப்பதாகவும், தற்போது பிறந்த வீட்டுக்கு வந்தவுடன் தனது சகோதரி தேறி வருவதாகவும்” கூறிய ரவி சங்கர் யாதவ், “மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவ வசதி போல் அதன் அண்டை மாநிலங்களில் இல்லை” என்று பெருமைபட கூறினார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏதும் இல்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக எந்த ஒரு மருத்துவமனையோ அதிகாரியோ வாய் திறந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பேசியதாக செய்தி வெளியான நிலையில், ஆக்சிஜனுக்காக உத்தர பிரதேச தம்பதி 850 கி.மீ. அலைக்கழிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடக்கவேண்டி உள்ள மேற்கு வங்கத்தில், பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் நிலவும் மருத்துவ அவல நிலை வாக்காளர்களிடையே பா.ஜ.க. மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.