கோழிக்கோடு

கேரளாவில் நடந்த சோலார் மின் தகடு மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு கோழிக்கோடு நீதிமன்றம் 6 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அப்துல் மஜீத் என்னும் தொழில் அதிபர் வழித்து வருகிறார்.  அவருக்குச் சொந்தமாக சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைத்து சோலார் மின் தகடுகள் பதிந்து தருவதாக சரிதா நாயர் மற்றும் அவர் கூட்டாளி பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் அணுகி உள்ளனர்.

இருவரும் இணைந்து இந்த விவகாரத்தில் அப்துல் மஜீத் இடம் ரூ. 43,70,000 மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  அப்துல் மஜீத் அளித்த புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.  இந்த வழக்கு கோழிக்கோடு குற்றவியல் முதல் வகுப்பு நீதிமன்றம் விசாரிக்கப்பட்டது.   இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில் சரிதா நாயருக்கு ஆறு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.40000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான பிஜு ராதாகிருஷ்ணன் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்த பட்டுள்ளதால் அவருக்கான தீர்ப்பு பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.  இதில் மூன்றாம் நபரான மணி மோன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.