திருமலை: திருப்பதியில் கொரோனா அதிகரித்து வருவதால் மதியம் 2 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆந்திர மாநிலத்தல் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருப்பதில் ஊரடங்கு நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,   திருப்பதி  எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி தலைமையில் மேயர் சிரிஷா, ஆணையாளர் மற்றும்,  திருப்பதி எஸ்.பி. வெங்கடஅப்பல் நாயுடு உள்பட உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து திருப்பதி  எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி  செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அப்போது, , “திருப்பதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த   திருப்பதி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இது நாளைமுதல் அமலுக்கு வரும் என்றும்,  இந்த பகுதி நேர ஊரடங்குக்கு  வணிகர் சங்கத்தினர் மற்றும் ஆட்டோ சங்கத்தினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், புகழ்பெற்ற திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழாவும் ரத்து செய்யப்படுகிறது. திருப்பதியில் காய்கறி மார்க்கெட்டிற்கு ஒரே நேரத்தில் பொதுமக்கள் வருவதை தடுக்கும் விதமாக மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.