சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லை ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என அறிவித்த திமுக, தற்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்கலாம் என கூறியுள்ளது. அதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை எந்தவொரு காரணத்துக்காகவும் திறக்க அனுமதிக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், திடீரென திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆலையை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தூத்துக்குடி பகுதிகளிலும் பரபரப்பு நிலவி வருகிறது. 5 மாவட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
நாட்டில் நிலவும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாட்டை போக்க மூடப்பபட்ட ஸ்டெர்லைட் ஆலைரைய திறக்க வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. இதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், தமிழக அரசு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தி வருகிறது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்பி உதயகுமார் பங்கேற்றுள்ளனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் திமுக சார்பில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ஆர்எஸ்.பாரதி கலந்துகொண்டனர். பாஜக சார்பில் மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் கே.டி.ராகவன். பாமக சார்பில் துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் ஆகியோர் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். . இந்த கூட்டத்தில் பங்கேற்க விசிக, அமமுக, மதிமுகாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்துராசன் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழக அரசின் அனுமதியில்லாமல் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு தரக்கூடாது. வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது கவலைக்குரியது. ஆக்சிஜன் பற்றாக்குறையை பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் முயல்கிறது. இதனை அரசு அனுமதிக்கக் கூடாது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அரசே எடுத்து நடத்த வேண்டும். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அரசு ஆக்சிஜன் தயாரிக்க எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே முழுமைகாக கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு கையகப்படுத்தி ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாம் , ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மக்களின் ஒத்துழைப்புடன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடன் கலந்து பேசி சுமூகமான அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறுகையில், ‘ ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை, நாம் வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்ல இயலாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆளும் கட்சியினர் உற்ற துணையாய் இருக்கிறார்களோ? என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் என்ன பதிலை அளிக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தளவாடத்தை பயன்படுத்தினால், அதை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.