டெல்லி: ஆக்சிஜன் தேவைக்காக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை தமிழகஅரசு இயக்க நடவடிக்கை எடுக்கலாமே என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி போப்டே கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு வேதாந்தா நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதை சாக்காக வைத்து, மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, ஆலையை திறக்க தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசே ஆலையை ஏன் ஏற்று நடத்தக் கூடாது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த வழக்கு திங்கட்கிழமையான இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கூடுதல் பிரமாணப் பத்திரத்தை வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆலையை இயக்க உரிய பயிற்சிபெற்ற 45 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அனுபவம் இல்லாத பணியாளர்களைக் கொண்டு ஆக்சிஜன் ஆலையை இயக்கினால், ஆக்சிஜனின் தரம் குறைவதுடன், பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு இல்லாததாக மாறிவிடும், அதனால் தமிழக அரசு ஆலையை இயக்க அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்து உள்ளது. மேலும், ஆலையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்று கருத முடியாது என்றும் வேதாந்தா நிறுவனம் கூறியுள்ளது.