
ஹராரே: கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக, டி-20 போட்டியொன்றில், பாகிஸ்தானை சாய்த்துள்ளது ஜிம்பாப்வே அணி.
தற்போது ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. அங்கு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில், பாகிஸ்தான் வென்ற நிலையில், இரண்டாவது போட்டி நடைபெற்றது.
இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் பேட்ஸ்மென்கள் யாரும், குறிப்பிடக்கூடிய ஆட்டத்தை ஆடவில்லை.
இந்நிலையில், எளிதில் ஊதித்தள்ளும் இலக்கை நோக்கி(ரன்களைவிட பந்துகள் அதிகம்) களம் கண்டது பாகிஸ்தான் அணி. ஆனால், நடந்ததோ வேறு.
கேப்டன் பாபர் ஆஸம், 45 பந்துகளில் 41 ரன்களை சேர்த்தார். டேனிஷ் அஸிஸ், 24 பந்துகளில் 22 ரன்களை சேர்த்தார். ஆனால், மற்றவர்கள் மோசமாக செயல்பட்டதால், 19.5 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 99 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி, 19 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்.
இதற்கு முன்னதாக, இரண்டு அணிகளுக்கும் இடையே, மொத்தம் 16 தடவைகள் டி20 போட்டிகள் நடந்துள்ளது. ஆனால், அவை அனைத்திலும் பாகிஸ்தானே வென்றது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]