சென்னை: ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்கும் வகையில் ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கொரோனா தடுப்பூசிகளுக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சம்பெற்றுள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்து மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளத. இதையடுத்து, தொற்று பரவலை தடுக்க தமிழகம் உள்பட பல மாநிலங்களில், பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
டெல்லி உள்பட பல மாநிலங்களில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி இன்று உயர்மட்டக்குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த கூட்டத்தில், ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரி ரத்து செய்யவும், கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியையும் ரத்து செய்யவும் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளுக்கு 3 மாதத்திற்கு சுங்க வரி ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.