டெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இது உலக அளவில் தினசரி பாதிப்பில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. தொற்று பாதிப்பை தடுக்க, தமிழகம் உள்பட சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, சில மாநிலங்களில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், கடந்த ஆண்டைப்போல, நடப்பாண்டும் புலம் பெயர் தொழிலார்கள், தினசரி கூலிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.பல வடமாநிலத்தவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு செல்லத்தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களின் கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் இழந்த மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இலவச தானியங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
பிரதமரின் “கரீப் கல்யாண் அன்ன யோஜனா” திட்டத்தின் கீழ் மே, மற்றும் ஜூன் மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்றும், பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக 2 மாதங்கள் இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இலவச உணவு தானியங்களை வழங்குவதற்காக ரூ.26,000 கோடி நிதியை மத்திய அரசு தரப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.