டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி மக்களை மிரட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், தடுப்பூசி பற்றாக்குறை, விலை உயர்வு ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், ரெம்டெசிவர் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு, கடத்தல், விலை உயர்வு மட்டுமின்றி, நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவையோடு, மத்திய, மாநில அரசுகளின் அதிகார மோதல், மக்கள் மீதான அக்கறையின்மை போன்றவற்றாலும், தொற்று பாதிப்பு உச்சமடைந்து உள்ளது. உலக நாடுகளிலேயே தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வரும் சோகமும் ஏற்பட்டுள்ளது.
‘இந்த நிலையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,62,63,695 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 279 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 1 கோடியே 36 லட்சத்து 48 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதுவரைல, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை நாடு முழுவதும் 13,54,78,420 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.