சென்னை: கோவை  சூலூர் தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் குறித்து அவதூறு பேசியதாக  முதல்வர் எடப்பாடி மீது தொடரப்பட்ட அவதுறு வழக்கில் முதல்வர் பதில் அளிக்க  நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

திமுகதொழிற்சங்க கோவை  நிர்வாகியான சூலூர் ஏ.ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19ஆம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றுள்ளார்.  அவர், மேல் படுக்கையில் இருந்து கீழே இறங்கும்போது, கீழ்பெர்த்தில் படுத்திருந்த பெண் மேல் விழுந்ததாக கூறப்பட்டது.  ராஜேந்திரனுக்கு அவருக்கு நீரழிவு பிரச்சினை இருந்ததால்,  மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழே உள்ள  பெண் மீது  விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்தப் பெண் வாய்மொழிப் புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்கத்துடன் நடந்தது இல்லை என்றும், நீரிழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, சூலூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சூலூர் ராஜேந்திரன் ரயில் பயணத்தின்போது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக விமர்சித்தார்.

இதுகுறித்து சூலூர் ராஜேந்திரன் தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் கூறப்பபட்டது. இதில் தேர்தல் ஆணையம்  நடவடிக்கை எடுக்காத நிலையில்,  சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, சூலூர் ராஜேந்திரன் வழக்கு குறித்து முதல்வர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.