மும்பை

காராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிப்பதால் மாவட்டங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு தினசரி பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.  நேற்று ஒரே நாளில் இங்கு 67,488 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை சுமார் 40.28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு பகுதியாக நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 15% ஊழியர்களுடன் மட்டும் செயல்பட உள்ளது.  மற்ற பிற அலுவலகங்களும் 15% ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணத் தடை விதிக்கப்பட்டாலும், மருத்துவ அவசரம், அத்தியாவசிய தேவைகள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்டவற்றிற்குப் பயணம் செய்ய அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வோர் 15 நாட்களுக்கு தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் புறநகர் ரயில் சேவைகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் பயணம் செய்ய வேண்டும் எனவும் 50% இருக்கைகளுடன் மட்டுமே இயக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.,   அத்துடன் திருமணங்கள் 25 பேருடன் மட்டும் 2 மணி நேரம் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது..

இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன.  இவை வரும் 1 ஆம் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும்.   மேலே உள்ள விதிமுறைகளை மீறுவோருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.