
“இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு…” என்ற என்ற வசனம் மூலம் வாழ்வின் உண்மையை உலகுக்கு பிரபலப்படுத்திய நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடையே இல்லை.
இயல்பான நகைச்சுவை, சுற்றுச்சூழல் ஆர்வம், சமூக சீர்த்த கருத்துக்களை திரைப்படங்கள் வாயிலாக உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த பத்மஸ்ரீ விவேக் காலமான செய்தி தமிழர்களின் மனதில் இடியாக இறங்கி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது இளம்மகனை நோய்க்கு பறிகொடுத்த விவேக், அந்த சோகத்தில் இருந்து மீண்டு, மீண்டும் சமூக சேவையிலும், திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால், இன்று அவர் நம்முடன் இல்லை. தமிழக மக்களை மீளா துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்.
மறைந்த விவேக்குக்கு அருள்செல்வி என்ற மனைவியும் அமிர்தநந்தினி என்ற மகளும் உள்ளனர்.

விவேக் வாழ்க்கை பாதை….
1961 நவம்பர் 19 அன்று அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தார் நடிகர் விவேக். இவரது முழுப்பெயர் விவேகானந்தன். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி என்ற கிராமம். மதுரையில் உயர்நிலைக்கல்வியை பயின்ற விவேக் ஒரு எம்.காம் பட்டதாரி.
சினிமா, நாடகங்கள் மீது தீராத ஆசை கொண்ட விவேக், கல்லூரி படிப்பு முடித்துவிட்டு, சென்னையில் பணியாற்றும் போது, ஓய்வு நேரத்தில் மெட்ராஸ் நகைச்சுவை கிளப்பில் பங்கேற்றார், தனது தேர்ந்த நகைச்சுவை உணர்வாலும், அதை உரிய முறையில் வெளிப்படுத்தும் திறமைக்காகவும் நகைச்சுவை கிளப்பின் சிறந்த பொழுதுபோக்கு விருதை பல முறை வென்றார் விவேக்.
நகைச்சுவை கிளப் மூலமாக திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரிடம் அறிமுகமான விவேக், அவரின் திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட்-எழுத்தாளராக பணியாற்றி வந்தார். புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் என அவர் தனது தனிப்பட்ட முத்திரையை பல திரைப்படங்களில் பதித்துள்ளார்.

பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் இயக்கத்தில் புதுப்புது அர்த்தங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய ஆனால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் விவேக்கின் இந்த வசனம் பிரபலமானது. ஆனால், இதுபோல் பற்பல பஞ்ச் டயலாக்குகளை பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உன்னதமான பணியை செய்துவந்தார் நடிகர் விவேக்.
ஆசிரியரான தந்தைக்கு பிறந்த விவேக், தனது நகைச்சுவை மூலம் லஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்ற பல சமூக விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
இப்படி நல்ல விஷயங்களை, நாட்டுக்கு அவசியமான விஷயங்களை இடித்துரைத்த (whistleblower) விவேக் 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தனது படங்களின் மூலம் சமூக சிந்தனைகள், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துவந்தார்.
மேலும் இவரது நகைச்சுவை கையூட்டு, மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றைத் தாக்குவதாக இருக்கும். சீர்திருத்த கருத்துகளை தனது கதாபாத்திரங்கள் மூலமாக மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணரைப் போல பரப்பி வந்ததால், இவருக்கு சின்ன கலைவாணர் என்று பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அப்துல்கலாம் மீது உள்ள தீராத பற்று காரணமாக ஏராளமான மரக்கன்றுகளை நட்டுவந்தது மட்டுமல்லாமல் அனைவரும் மரம் நட வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்துவந்தார்.
இவரது சேவையைப் பாராட்டி 2009ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு முறை சிறந்த கலைச்சேவைக்காக மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் (A. P. J. Abdul Kalam) மீது அறப்பரியாத மரியாதையை கொண்டவர் விவேக். அவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னிலை வகித்து, அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வந்தார்.
கிரீன் கலாம் (Green Kalam) அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் என பல்வேறு இடங்களிலும் இதுவரை 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.
இவர் திரைத் துறையில் 1987ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளிவந்த ‘தாராள பிரபு’ படத்தில் நடித்தார்.
நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது விவேக்குக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டு, மயக்கமானார்.
உடனடியாக நடிகர் விவேக் வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக்கின் இதய செயல்பாடு குறைந்துவிட்டது. எனவே எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று ( ஏப்ரல் 17ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு) அதிகாலை 4.35 மணிக்கு காலமானார்.
தற்போது அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை விருக்கம்பாக்கத்தில் உள்ள மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் அன்னாரின் உடலுக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
[youtube-feed feed=1]