சென்னை: புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக்,  மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில்  நேற்று அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59.  அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் , பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தியும், இரங்கல் தெரிவித்தும் வருகின்றனர்.

நடிகர் விவேக்கின் மறைவு குறித்து அவருடன் பணியாற்றிய திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய மறைவு குறித்து அவர்கள் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சகோதரர் பத்மஸ்ரீ விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று மக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். சிறந்த சுற்றுச் சூழல் ஆர்வலராக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை வளங்களை பாதுகாத்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்” தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: மறைந்த விவேக் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் சமூக பாதுகாப்பில் அக்கறை கொண்டவராக இருந்தார். இவர் பழக மிக இனிமையானவர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். கலாமின் கனவை நிறைவேற்ற நல்ல பணிகள் செய்தவர். கலை மற்றும் சமூக சேவையால் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர் என தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

‘மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அன்பு சகோதரர் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். திரைப்படங்கள் மூலம் பல சமூக சீர்திருத்த கருத்துகளை பரப்பிய திரு.விவேக் அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு ஆகியவற்றிலும் முக்கியப்பங்கு வகித்தவர். பத்மஸ்ரீ திரு.விவேக் அவர்களின் மறைவு இச்சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். தனது வாழ்நாள் முழுவதும் நகைச்சுவை மூலம் நம்மை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தவர், இன்று சோகத்தில் நம்மை ஆழ்த்திவிட்டார்.

மாரடைப்பு காரணமாக இன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச் சகோதரர் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின்திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்; ‘சின்னக் கலைவாணர்’  @Actor_Vivek அவர்களின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்? அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

“நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 60 ஆண்டுகள் கூட நிரம்பாத அவர், உடல் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்து கலைத்துறைக்கு பணியாற்றுவார் என்று ஆவலோடு எதிர்பார்த்தோம். ஆனால், நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி நம்மை விட்டு பிரிந்து விட்டார்.

நகைச்சுவை வேடங்களில் நடித்து சரித்திரம் படைத்த கலைவாணரைப் போல, திரைப்படங்களில் சமுதாய, சீர்திருத்த, பகுத்தறிவு, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். அதனால், அவர் ‘சின்னக் கலைவாணர்’ என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார். நகைச்சுவை நடிகரான இவர், கதாநாயகனின் நண்பராகவும், பல குணசித்திர கதாபாத்திரங்களிலும், பிறகு கதாநாயகனாகவும் நடித்து சாதனை படைத்தவர்.

திரைப்படக் கலைஞர் என்ற நிலையிலிருந்து, சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், முற்போக்கு சிந்தனையோடு அறிவார்ந்த கருத்துகளை மக்களிடையே பரப்பியவர். நடிகர் விவேக்-ஐ மட்டும் நாம் இழக்கவில்லை. அற்புதமான பண்பாளரை, மனிதநேயரை, தூய சிந்தனை கொண்ட ஒரு மனிதரை இழந்திருக்கிறோம். இவரின் இழப்பு கலைத்துறைக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

நடிகர் விவேக்-ஐ இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைப்படத்துறையினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

பாமக தலைவர் ராமதாஸ்

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் விவேக் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ்த் திரையுலகில் நடிகர் விவேக் தனித்துவம் கொண்டவர். அவரது நகைச்சுவைகள் சிரிக்க வைப்பது மட்டுமின்றி சிந்திக்கச் செய்ய வைப்பவையாக வும் இருக்கும். மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர். அதனால் சின்னக் கலைவாணர் என்று போற்றப்பட்டவர். தமது நகைச்சுவைகளின் மூலம் பிறரின் மன இறுக்கங்களைப் போக்கி, நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு வழிகோலிய நடிகர் விவேக், இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகம். அந்த செய்தியை ஏற்க முடியவில்லை.

திரைத்துறைக்கு வெளியிலும் சமூகப் பொறுப்பு மிக்கவராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். மரங்களை நடுவதை தமது சமூகக் கடமையாகக் கொண்டிருந்த அவர், பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தவர். வெளியில் தெரியாமல் பல குழந்தைகளின் கல்விக்கு உதவியவர். மாரடைப்பால் பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் உடல் நலம் தேறி விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தை நம்ப முடியவில்லை.

நடிகர் விவேக் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள், ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன்

நல்ல சமூக சிந்தனை உடையவர், செயற்பாட்டாளர் நடிகர் விவேக்.நடிகை ராதிகாநடிகர் விவேக் மரண செய்தி எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டரில் நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

“சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.

பாலச்சந்தர் அவர்களுடைய நாடகங்களில் பங்கேற்று நடித்து, அப்படியே அவர் வழியாகவே மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகி, மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான முறையில் வளர்ந்து, திரைத்துறையில் தடம் பதித்தார். தமிழ்த்திரை உலகில், நகைச்சுவைக் கருத்துகள் மூலம், மிகப்பெரும் சாதனைகளைப் படைத்த கலைவாணரின் வழித்தோன்றல்களாக, நடிகவேள் எம்.ஆர். இராதா, சந்திரபாபு, டி.எஸ். பாலையா, சுருளிராஜன், மணிவண்ணன், சத்தியராஜ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று ஒரு மிகப்பெரும் பட்டாளம், நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளைக் கூறியதோடு, குணச்சித்திர நடிகர்களாகவும் திகழ்ந்து இருக்கின்றார்கள்.

தான் ஈட்டிய பொருளிள் பெரும்பகுதியை, சமூகத் தொண்டு அறப்பணிகளுக்காகச் செலவிட்டார். அப்துல் கலாம் அவர்கள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டு, அவரது நினைவுப் பட்டறை அமைத்து, இளம்பிள்ளைகளுக்கு மனித நேயக் கருத்துகளை எடுத்து உரைத்தார். தமிழ்நாடு முழுமையும் இலட்சக்கணக்கான மரங்களை ஊன்றி வளர்த்தார். தான் பிறந்த மண்ணை மறக்காமல், அடிக்கடி வந்து செல்வார். உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார். தன் முன்னோர்களுக்கு, நினைவு இடமும் கட்டி வைத்து இருக்கின்றார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

நீங்கள் எங்கள் விட்டுப் பிரிந்ததை நம்பமுடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். பல வருடங்களாக எங்களைச் சிரிக்க வைத்தீர்கள். உங்களுடைய சாதனைகள் எப்போதும் எங்களின் நினைவுகளில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

நடிகர் செந்தில்:

திரைத்துறையில் திறமையான நடிகர் விவேக். சுற்றுச் சூழலுக்காக போராடியவர் என்று தனது இரங்கல் செய்தியில் நடிகர் செந்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் மயில்சாமி:

நல்ல தர்ம சிந்தனை உள்ளவர். அவருடைய இழப்பு எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

நடிகர் சூரி:
அவர் மறைந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் மறைவை நினைத்து மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்.

இயக்குனர் நடிகர் பார்த்திபன்

”சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு . வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!”என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார் நடிகரும் இயக்குருமான ஆர்.பார்த்திபன். சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு … வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!

கவுதம் கார்த்திக்

”இதை நம்ப முடியவில்லை . அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் எங்களுக்குக் கல்வி கற்பித்தார், இந்த உலகத்தை கவனித்து, அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார்.உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார் ஐயா.நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம். சாந்தியடைய
வேண்டுகிறேன்.”என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார் நடிகர் கவுதம் கார்த்திக்.

எஸ்.ஜே.சூர்யா

”மாபெரும் கலைஞனே..மனம் உடைந்து போனேன். பெரிய இழப்பு. என்ன நடக்கின்றது?” என்று அதிர்ச்சியில் உறைந்து சொல்கிறார் நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா.

சமந்தா: எவ்வளவு பெரிய இழப்பு. அதிர்ச்சியில், சோகத்தில் இருக்கிறேன்

தேவி ஸ்ரீ பிரசாத்ஆண்டவா. என்னால் நம்பமுடியவில்லை.மூத்த நடிகர் விவேக் மறைந்து விட்டார் என்கிற செய்தியைக் கேட்டு விழித்தேன். மனமுடைந்துவிட்டேன். நம் காலகட்டத்தில் இருந்த மிகச்சிறந்த நகைச்சுவையாளர். தனது நகைச்சுவையில் எப்போதும் சமூகத்துக்கான செய்தியைச் சேர்த்தவர். எங்கள் நெஞ்சில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்.

அஜய் ஞானமுத்துநொறுங்கிப் போனேன். நமது காலகட்டத்தின் மிகச்சிறந்த நகைச்சுவையாளர் மறைந்து விட்டார் என்பதைக் கேட்டு மனமுடைந்து போவேன். உங்கள் இழப்பை என்றும் உணர்வோம் விவேக் சார்.

வித்யூ ராமன்: நம்ப முடியவில்லை. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். உங்களைப் போன்ற ஒரு நகைச்சுவை சகாப்தத்துடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவும்.

பிரசன்னா: விவேக் சார் இனி இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. திரைத்துறையில் அவரது பணியும், அவரது சமூகப் பணியும் நீண்ட நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும். நமது அனைவரது இதயத்திலும், அவர் நட்ட ஒவ்வொரு மரத்திலும் அவர் வாழ்வார். சென்று வாருங்கள் சார்.

கெளதமிதனக்குக் கிடைத்த ஒவ்வொரு தளத்திலும் சமூகத்திற்கான தன் சேவையைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்து, பலருக்கும் முன்மாதிரியாக இருந்த மாமனிதர் ‘சின்னக் கலைவாணர்’ விவேக் அவர்கள். இந்திய அரசின் உயரிய கௌரவமான பத்மஸ்ரீ பட்டம், 30 இலட்சத்திற்கும் அதிகமான மரங்களை வளர்த்தது, 5 முறை சிறந்த நகைச்சுவை நடிகருக்கான மாநில விருது எனப் பல தளங்களிலும் சாதனைகளைச் செய்தவர். இன்னும் பல சாதனைகளையும் இலக்குகளையும் அடைந்திருக்க வேண்டிய அவரின், எதிர்பாராத மறைவு, மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவர்களது இழப்பால் வாடும் ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். சிறந்த மனிதர்கள் மரணிப்பதில்லை, தங்கள் சேவையின் நினைவினால் நம்முடன் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பர். திரு #விவேக் அவர்கள் இம்மண்ணைவிட்டு மறைந்திருந்தாலும் அவர்கள் வளர்த்த 30 இலட்சத்திற்கும் அதிகமான மரங்கள் அவர் நினைவைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.

செல்வராகவன்நொறுங்கிப் போயிருக்கிறேன்.

சுஹாசினி மணிரத்னம்நொறுங்கிப்போயிருக்கிறேன். இது எப்படி சாத்தியம் விவேக். இவ்வளவு சீக்கிரம் மறையக் கூடாத மிகவும் இளமையான, மிகவும் சாமர்த்தியமான, மிகத் திறமையான, மிக புத்திசாலித்தனமான நபர்.

குஷ்புமிகப்பெரிய அதிர்ச்சி, நான் உடைந்து போயிருக்கிறேன். இவ்வளவு சுறுசுறுப்பாக, திடமாக இருந்த ஒரு நபர் எப்படி இறக்க முடியும்? விவேக் மிகச்சிறந்த மனிதர். சீக்கிரம் மறைந்துவிட்டார். அவரது இழப்பைக் கண்டிப்பாக உணர்வோம்.

பிரகாஷ் ராஜ்ஆ விவேக். அன்பு நண்பரே, விரைவில் சென்று விட்டீர்களே. மரங்களையும், சிந்தனைகளையும் நட்டதற்கு நன்றி. உங்கள் நகைச்சுவையின் மூலம் எங்களுக்குப் பொழுதுபோக்கையும், நல்ல சிந்தனைகளையும் தந்ததற்கு நன்றி. உங்கள் இழப்பை உணர்வோம். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

சுரேஷ் காமாட்சிஆயிரமாயிரம் வேண்டுதல்கள் பலிக்கவில்லையா? நேற்று முன்தினம் மகிழ்வோடு நின்றவர் இன்றில்லையா? நம்ப மறுக்கிறது மனம். வாழ்நாளில் என்ன நல்லவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் திரையிலும், தன் வாழ்க்கையிலும் செய்துகாட்டியவர். இன்னும் வாழ்ந்திருக்க வேண்டியவர். இழந்துவிட்டோம். சினிமாவிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் சின்னக் கலைவாணர் விவேக்கின் இழப்பு பேரிழப்பு. இதயப்பூர்வமான அஞ்சலிகள்.

அருண் விஜய்நடிகர் விவேக் நம்மிடையே இல்லை என்பதை நினைத்து அதிர்ச்சியாக இருக்கிறது. நம்மைச் சிரிக்க வைத்த, பொறுப்பாகச் சிந்திக்க வைத்த, அன்பு மனம் கொண்ட உயர்ந்த மனிதர். விரைவில் சென்றுவிட்டார். கண்டிப்பாக அவர் இல்லாத குறையை நாம் உணர்வோம். உங்களை நேசிக்கிறோம் சார். என்றும் எங்கள் மனங்களில் இருப்பீர்கள்.

சுனைனாவிவேக் அவர்களின் குடும்பத்தினர், நெருக்கமானவர்கள், ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். என்றுமே நம்மைச் சிரிக்க வைத்தவர் இன்று நம்மிடமிருந்து அந்தச் சிரிப்பைப் பறித்துக் கொண்டு விட்டார். அவரது இழப்பை என்றுமே உணர்வோம். ஒரு சகாப்தத்தின் முடிவு.

கே.வி.ஆனந்த்: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக். சிறந்த மனிதர். இயற்கையை நேசித்தவர்.

ராதிகா சரத்குமார்: வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு அதிர்ச்சி. உங்களுடன் செலவிட்ட பல அற்புதமான தருணங்கள், நினைவுகள் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கின்றன. உங்கள் குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள். அன்பு நண்பரே, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்

மோகன் ராஜாஇந்த சகாப்த நடிகர் இனி இல்லை என்பதை என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அதிர்ச்சிகரமாக இருக்கிறது. எம் குமரன் திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நினைவுகளை என்றுமே பொக்கிஷமாக வைத்திருப்பேன். அவரது குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இமான்: நமது விவேக் அவர்கள் நம்மிடையே இனி இல்லை என்பதை எனது மனமும் ஆன்மாவும் நம்ப மறுக்கின்றன. என்ன ஒரு அசாதாரணமான கலைஞர், மனிதரை நாம் இழந்திருக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு என் மனமார்ந்த அனுதாபங்கள்.

ஹரிஷ் கல்யாண்: நடிகர் விவேக் அவர்கள் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க முடியவில்லை. உண்மையில் மனமுடைந்து போனேன். உங்கள் நடிப்பின் மூலம், சமூகப் பணியின் மூலம் மூலம், அற்புதமான ஒரு ஆன்மாவாக இருந்ததன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு உந்துதலாக இருந்திருக்கிறீர்கள். நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மனிதராக எங்கள் மனங்களை என்றுமே வென்றிருக்கிறீர்கள்.

ஒளிப்பதிவாளர் வெற்றிநடிகர் திரு.விவேக் அவர்களின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

நிவின் பாலி: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார். உங்கள் இழப்பை உணர்வோம்.

கிருஷ்ணாமனதை நொறுக்கும் செய்தி. அவரது சொந்தங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்.

ஆதவ் கண்ணதாசன்திரைப்படங்களில் தனது நல்ல நடிப்பால் நம்மைச் சிரிக்க வைத்த அற்புதமான மனிதர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அனைவரும் விரும்பும் ஒரு நபர் விவேக் அவர்கள். அவர் கனவு கண்டபடி மரங்களை நட்டு அவரை நாம் பின்பற்றுவோம் என்று நம்புகிறேன்.

எஸ்.ஆர்.பிரபுதிரைத்துறைக்கும், தமிழகத்துக்கும் மிகப்பெரிய இழப்பு. நீங்கள் எங்களுக்காகத் தந்த லட்சக்கணக்கான சிரிப்புக்காகவும், நட்ட மரங்களுக்காகவும் என்றுமே நினைவுகூரப்படுவீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்.

ஸ்வேதா மோகன்: ஒரு நாள் முன்னர் தான் அவரது கடைசி பதிவு. அவரது இறப்புக்கு தடுப்பூசி காரணமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். நாமும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஓர் உயர்ந்த கலைஞனுக்கு நமது இறுதி மரியாதையைச் செலுத்துவோம். இது மிகப்பெரிய இழப்பு. நான் பெரிய ரசிகை. ஓம் சாந்தி விவேக் சார்.