சென்னை: புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், நேற்று  காலை மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கலமானார். முன்னதாக  நேற்று காலையில் படப்பிடிப்பின்போது, சுய நினைவின்றி மயங்கியதால், அவரது குடும்பத்தினர் அவரை உடனே சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனைக்கு விவேக் கொண்டு செல்லப்பட்டார்.

விவேக்கிற்கு ரத்த நாளத்தில் பிளாக் இருந்தது. அதை ஆஞ்சியோ செய்து சரி செய்தார்கள். அதன்பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரை 24 மணி நேரம் ஐ.சி.யூவில் வைத்த பிறகு தான் மறுபரிசீலனை செய்ய உள்ளோம். 24 மணி நேரம் கழித்துதான் அவரது உடல்நிலை குறித்து மற்ற அறிவுப்பு வெளியிட முடியும் என்று சொல்லி இருந்தனர் மருத்துவர்கள்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் விவேக் உயிர் பிரிந்தது. நடிகர்  விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

இரு தினங்களுக்கு  (ஏப்ரல் 15ந்தேதி) முன்பு தான் நடிகர் விவேக்,  சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலருடன்  செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் தனியார் மருத்துவமனயில் தடுப்பூசியை போடுவதை விட அரசு ஏற்பாடு செய்திருக்கும் மையத்தில் போட்டுக் கொண்டதாக தெரிவித்தார். அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விவேக் பிரச்சாரம் செய்துவந்தார் .

இந்த நிலையில், நடிகர் விவேக் (Actor Vicek) சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக செய்தி வந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மறைந்த விவேக்கின் உடல் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து  விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் பாலசந்தரால் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் அறிமுகமானவர் விவேக். கலைவாணரைப்போல சமூக சிந்தனை கருத்துக்களை நகைச்சுவையுடன் சொல்லி வந்ததால், சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்பட்டார். 200 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்ற விவேக், கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் அன்புக்குக்கு உரியவராக இருந்தார் விவேக். பத்மஸ்ரீ, பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். ஐந்து முறை தமிழக அரசின் நகைச்சுவை நடிகர் விருதினை பெற்றுள்ளார்.