ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் பயனர்களுக்கு செலுத்த வைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசிகளில் 320 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருட்டு போயுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் உள்ளது கந்த்வாதியா அரசு மருத்துவமனை. அங்குள்ள கிடங்கில் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று இரவில் கிடங்கில் இருந்து 320 டோஸ் தடுப்பூசி மருந்து மாயமாகி இருந்தது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு தெரியவந்தது.

ராஜஸ்தானில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து,   மாநிலம் முழுவதும் நாளை (ஏப்ரல் 16) முதல் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டு உள்ளது.

தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் உருவாகி உள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள  கந்த்வாதியா அரசு மருத்துவமனை கிடங்கில் வைக்கப்பட்டிருந்த  பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிகள் 32 சிறிய பாட்டில்கள் திடீரென மாயமானது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒரு

ஒரு சிறிய பாட்டில் 10 டோஸ் தடுப்பு மருந்து இருக்கும். அதன்படி  மொத்தம் 320 டோஸ் தடுப்பூசி மாயமாகி உள்ளது. இதுகுறித்து, அந்த  மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஹர்ஷ்வர்தன், இது தொடர்பாக ஜெய்ப்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியான நரோட்டம் சர்மாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.மேலும்,  சாஸ்திரி நகர் காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை,  மருத்துவமனையின் சி.சி.டி.வி காட்சிகளை  பரிசோதித்து வருவதாகவும், அனைத்து ஊழியர்களிடமும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும்  கூறப்படுகிறது.

இதை மாநில பாஜக அரசியலாக்கி பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது.  இந்த விவகாரம் குறித்து மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், அரசு மருத்துவமனையில் இருந்து  தடுப்பூசிகள் திருடுபோயிருப்பது மாநிலத்தின் சுகாதார செயல்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை காட்டுகிறது என விமர்சித்துள்ளார்.