சென்னை: அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, ஒருசார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப் படுவதை யும் உறுதிசெய்திட வேண்டும் என, தேர்தல் ஆணையம் மம்தாவுக்கு விதித்துள்ள தடை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்மன்ற தேர்தல் நடைபெற்ற வருகிறது. இதுவரை  4 கட்டத் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

இதற்கிடையில், அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, முஸ்லிம் வாக்குகளைப் பெற மத ரீதியாகப் பேசியதும், மத்தியப் படைகளுக்கு  எதிராக மக்களை  வெகுண்டெழுமாறு கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது மக்களை பிளவுபடுத்தும், வன்முறையை தூண்டும் என விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதுகுறித்து,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 13) தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார், அதில் , “நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது. ஆகவே, அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, சார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.