இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில், கோவில்ஷீல்டு தடுப்பூசியானது, ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்களின் கண்டுபிடிப்பானது. இதை புனேயில் உள்ள சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, இந்திய தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் என்ற தடுப்பூசியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், பல நாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள பல தடுப்பூசி நிறுவனங்களும் இந்திய பயன்பாட்டுக்கு அனுமதிக்கோரி விண்ணப்பித்துள்ளன. உலக நாடுகளிலேயே முதன்முதலாக, ‘ஸ்புட்னிக் வி’ என்ற தடுப்பூசியை ரஷியா தயாரித்து பயன்படுத்தி வருகிறது. இந்த தடுப்பூசிகளுக்கு பல்வேறு நாடுகள் ஒப்புதல் அளித்து தங்கள் நாடுகளில் பயன்படுத்தி வருகின்றன.
இந்த தடுப்பூசியை இந்தியாவில் சோதனை மற்றும் விநியோகம் செய்ய டாக்டர் ரெட்டி ஆய்வகம் உரிமம் பெற்றது. அதைத்தொடர்ந்து, ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் (சி.டி.எஸ்.சி.ஓ.)விண்ணப்பித்தது. இதை சி.டி.எஸ்.சி.ஓ.வின் சிறப்பு நிபுணர் குழு பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில், தற்போது ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை இந்தியாவில் குறிப்பிட்ட சூழல்களில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அந்த குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இது, இந்திய தடுப்பூசி பணிகளுக்கு மேலும் உந்துசக்தியாக அமையும் என மருத்துவ நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.