புதுடெல்லி: ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக்-V என்ற கொரோனா தடுப்பு மருந்துக்கு, இந்தியாவில் அவசரகால அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, டாக்டர்.ரெட்டியின் ஆய்வகங்களுடைய விண்ணப்பத்தை, கவனத்தை எடுத்துக்கொண்டுள்ளது மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்(சிடிஎஸ்சிஓ). இந்த மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டால், இந்தியாவில் புழக்கத்திற்கு வரும் மூன்றாவது கொரோனா தடுப்பு மருந்தாக இது இருக்கும்.
தற்போது, இந்தியாவில் புழக்கத்திலுள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பு தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. பல மாநிலங்களுக்கு தேவைக்கேற்ற சப்ளை இல்லை என்றும் புகார்கள் எழுகின்றன. எனவே, தற்போது ஒரு முக்கியமான தருணத்தில் ஸ்புட்னிக்-V மருந்துக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்புட்னிக்-V தடுப்பு மருந்தின் செயல்பாட்டுத் திறன் 92% என்று கூறப்படுகிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் ஒருநாளில் 40,55,055 டோஸ்கள் தடுப்பு மருந்து விநியோகம் செய்யப்படுகிறது. அந்தவகையில், உலகளவில் இந்தியா முதல்நிலை நாடாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.