மும்பை: டெல்லி அணிக்கெதிரான போட்டியில், சிறப்பாக ஆடிவந்த சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னா, எதிர்பாராதவிதமாக ரன்அவுட் ஆனார்.

கடந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்காத சுரேஷ் ரெய்னா, இத்தொடரில் பங்கேற்றுள்ளார். தனக்கு மீண்டும் வழங்கப்பட்ட வாய்ப்பை, நியாயப்படுத்தும்விதமாக இன்று சிறப்பாக ஆடினார்.

சென்னை அணி தடுமாறியபோது, இவர் அதிரடியாக ஆடி, ரன் விகிதத்தை உயர்த்தினார். மொத்தம் 36 பந்துகளை சந்தித்த ரெய்னா, 4 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களை அடித்து ஆடிவந்தார்.

இவருடன் ஜடேஜா ஜோடியாக நின்றார். இந்நிலையில், சரியான புரிதல் இல்லாத ஓட்டத்தால், ஜடேஜாவின் தவறால் ரன்அவுட் ஆனார் சுரேஷ் ரெய்னா. இதனால், சென்னை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, ரன்ரேட் விகிதமும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அம்பாதி ராயுடு, 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தற்போதைய நிலையில், சென்னை அணியின் ரன்விகிதம் சிறப்பாகவே உள்ளது.