சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் சென்னையில் கொரோனா தொற்றின் தீவிர பரவலுக்கு காரணம் மக்களின் மெத்தனமே என சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னையில் சுமார் 73 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை, குடிசைவாசிகளில் 79 சதவிகிதம் பேர் மாஸ்க் போடுவதே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதிமுதல் குறைந்து வந்த தொற்று பாதிப்பு, இந்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படும் நிலையில், சென்னையிலும் நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் காரணமாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களினாலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதற்கிடையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சென்னைவாசிகள் எப்படி கடைபிடிக்கிறார்கள் என்பது குறித்து, ந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், சென்னை மாநகராட்சியும் ஒருங்கிணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. அதன்படி, சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகளிலும், பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் 64 தெருக்களில் நடத்தப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சி ஆய்வு முடிவுகளை வெளியிட்டு தெரிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது,
சென்னைவாசிகளில் பெரும்பாலானவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை.
காய்கறி கடைகளில் மக்கள் அருகருகே நின்று பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவில்லை
முகக்கவசம் அணிபவர்களிலும் கணிசமானவர்கள் அதை உரிய முறைப்படி அணிவதில்லை.
சென்னையில் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுகின்றனர்.,
கொரோனா குறைந்ததும் மக்களிடம் பயம் நீங்கியதால் முகக்கவசம் அணிவதை கைவிட்டு விட்டனர்.
வீட்டை விட்டு வெளியே செல்பவர்களில் குடிசைவாசிகள் 56 சதவீதம் பேர் மாஸ்க் போடுவதில்லை.
வசதிபடைத்தவர்களில் 53 சதவீதம் பேரும் முகக்கவசத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை.
மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு வருபவர்களும் முகக்கவசத்தை சரியானபடி பயன்படுத்தவில்லை .
மொத்ததில் சுமார் 73 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை.
குடிசை பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 79 சதவீதம் பேர் முகக்கவசத்தை தொடுவதே இல்லை.
சென்னைவாசிகளில் 20 சதவீதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் மெத்தனம் காரணமாகவே சென்னையில் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.