சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால், பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பூங்காக்களில் தடுப்பூசி முகாம், மெரினாவில் நடைபயிற்சி அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும்,, காசிமேடு உள்பட மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உளளார்.
இன்று செய்தியளார்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது,
கொரோனாவை தடுக்க பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சென்னையில் கொரோனா பரவல் விகிதத்தை கண்காணித்து அதற்கேற்ப கூடுதல் பணியாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். கொரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்து கிறோம். முதலில் 50 காய்ச்சல் முகாம்களை ஏற்பாடு செய்கிறோம். அதன்பிறகு 100, 150 என அதிகரிப்போம். மேலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் சென்னையில் உள்ள 200 மினி கிளினிக்குகளிலும் காய்ச்சல் பரிசோதனை செய்யலாம். மக்கள் நடந்து வரும் தூரத்திலேயே இந்த வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறோம். மருத்துவ பணியாளர்கள் உங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா? அல்லது சாதாரண அறிகுறிதானா என்பதை தெரிவிப்பார்கள்.
மாநகராட்சி அலுவலர்கள் அசாதாரண சூழ்நிலையில் பணி செய்வதை புரிந்துகொண்டு பொதுமக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றவர், காய்ச்சல் பரிசோதனைக்காக வீடு தேடி வருபவர்களிடம் தங்களது உடலில் உள்ள நோய் அறிகுறிகளை தயவு செய்து தெரிவியுங்கள் அறிகுறிகளை விரைவில் கண்டுபிடித்தால் கொரோனாவை குணப்படுத்துவது எளிது. இதை ஒரு வருடமாக கூறி வருகிறோம், தயதுசெய்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் கொரோனாவை தடுக்க நமக்கு தடுப்பூசி வந்துள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. தேர்தல் காரணமாக தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
சென்னையில் 45 வயதை கடந்தவர்கள் இன்னும் 10 லட்சம் பேர் தடுப்பூசி போடவில்லை. எல்லோரும் ஆர்வமுடன் முன்வந்து போட்டுக்கொண்டால் இன்னும் 10 நாட்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடித்து விடலாம். தற்போது தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்தி உள்ளோம். இப்போது தினமும் 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இன்னும் 10 நாட்களில் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஏற்கனவே முதல் டோஸ் போட்டவர்கள் 2-வது டோஸ் போடுவதற்கான நாட்களும் வந்து விட்டது. 2 டோஸ் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். ஒருமுறை ஊசி போட்டால் வேலை முடிந்துவிட்டது என நினைக்கக்கூடாது. ஒருமுறை ஊசி போட்டால் 50 சதவீதம் தான் பயன் அளிக்கும். 2-வது தடுப்பூசி போட்டால் தான் முழுமையான பயன் கிடைக்கும். கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் டோஸ் போட்டு 6 வாரம் கழித்து 2-வது டோஸ் போட வேண்டும்.
தெருவாரியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரெல்லாம் தடுப்பூசி போடவில்லை என்பதையும் கணக்கு எடுத்து வருகிறோம். அதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் தெருக்களின் அருகில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் முகாம் அமைத்து தடுப்பூசி போட ஏற்பாடு செய்யும் திட்டமும் உள்ளது.
தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், வங்கிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 100-க்கும் மேல் பணியாற்றினால் அங்கு மருத்துவ குழுவினர் சென்று தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.