சிச்சார்

அசாமில் தபால் வாக்குகளை எடுத்துச் சென்ற இரு தேர்தல் அதிகாரிகளின் வீடியோ வெளியானதையொட்டி தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் அதிகாரி பிஸ்வஜித்

அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.   இம்முறை முதியோர் தபால் வாக்குகள் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  அசாம் மாநிலத்தில் உள்ள சிச்சார் பகுதியில்  இந்த தபால் வாக்கு சீட்டை இரு அதிகாரிகள் கையில் எடுத்துக் கொண்டு வியாழன் இரவு செல்லும் போது சில உள்ளூர்வாசிகள் பார்த்துள்ளனர்.

அவர்கள் இவர்களை தடுத்து விசாரித்ததில் இருவரும் தேர்தல் அதிகாரிகள் என்பதும் இவர்கள் பெயர் பிஸ்வஜித் தே புர்கயஸ்தா மற்றும் தீபக் கோஸ்வாமி என்பது தெரிய வந்தது.  அவர்கள் இருவரிடமும் உள்ளூர் மக்கள் விசாரித்தது வீடியோ படமாக்கப்பட்டு தேர்தல் ஆணைஅய்த்துக்கு அனுப்பபட்டுள்ளது.

அந்த வீடியோவில் அதிகாரிகள், சிச்சார் பகுதியில் உள்ள சபயாசச்சி தத்தா என்பவருக்கு தபால் வாக்குச் சீட்டு தவறுதலாக அனுப்பபட்டது.  அதை அவர் வாக்களிக்கும் போது எடுத்து வந்து திருப்பி அளித்து விட்டு தனது வாக்கை நேரடியாக செலுத்தினார்.  இதைப் போல் வேறு சிலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதை நாங்கள் அவர்களிடம் இருந்து வாங்கி எடுத்துச் செல்கிறோம்.  இந்த வாக்கு சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதா என்பது எங்களுக்கு தெரியாது..  எங்களது உயர் அதிகாரிகள் இதை திரும்ப வாங்க சொன்னதால் எடுத்து செல்கிறோம்,.   எங்கள் உயர் அதிகாரியின் பெயர்களை நாங்கல் சொல்ல முடியாது.” என தெரிவித்தது பதிவாகி உள்ளது.

உள்ளூர் மக்கள் இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு வீடியோவுடன்  புகார் அளித்துள்ளனர்.  அவர்களின் புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.   இந்த தபால் வாக்குகள் ஏப்ரல் ௧ ஆம் தேதி நடைபெற்ற தேர்தலுக்கானது ஆகும்  தேர்தல் நடைமுறைப்படி வாக்களிக்காத தபால் வாக்கு சீட்டுக்கள் தேர்தலுக்கு முன்பே திரும்பப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.