சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த முடியுமா என கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4000ஐ நெருங்கி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் தினசரி 1000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இன்று தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் பொதுத் தேர்வை தற்போது நடத்துவது சரியா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றுள்ளது. இதில் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் தீரஜ்குமார், இயக்குநர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக் கூட்ட விவரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் முடிவை எதிர் நோக்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.